January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”என்றென்றும் என் சிந்தனையும் செயலும் இந்நாட்டு மக்களுக்காகத்தான்”: மு.க.ஸ்டாலின்

”உங்களுக்கு உண்மையாக இருப்பேன். உங்களுக்காக உழைப்பேன். என்றென்றும் என் சிந்தனையும் செயலும் இந்நாட்டு மக்களுக்காகத்தான்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அது குறித்த இன்று மாலை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், தமிழ்மொழிக்கும் – இனத்துக்கும் – நாட்டுக்கும் காவல் அரணாக உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆறாவது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டுக்கு இயக்க ரீதியாகவும் – ஆட்சி ரீதியாகவும் உழைத்த நமது உழைப்புக்குக் கிடைத்த பாராட்டுப் பத்திரமாக நினைத்து இதனைப் பாதுகாப்பேன். நமது உழைப்புக்குத் தரப்பட்ட அங்கீகாரமாக இதனை நினைக்கிறேன் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

எப்போதும் உங்களுக்கு உண்மையாக இருப்பேன். உங்களுக்காக உழைப்பேன். என்றென்றும் என் சிந்தனையும் செயலும் இந்நாட்டு மக்களுக்காகத்தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழகத்தில் அமையப் போகும் கழக ஆட்சியானது, எத்தகைய கனவுகள் கொண்டதாக தமிழகம் அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் சேர்ந்து நடத்தப் போகும் ஆட்சியாகும். என்று கூறியுள்ள ஸ்டாலின் ‘கழகம் வென்றது – அதைத் தமிழகம் இன்று சொன்னது அதேபோன்று இனித் தமிழகம் வெல்லும் அதை நாளைய தமிழகம் சொல்லும்’ என்றும் தெரிவித்துள்ளார்.