January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”திமுகவின் வரலாற்றில் புதியதோர் அத்தியாயம் தொடங்க இருக்கிறது”

”எந்தக் காரணத்திற்காகவும் முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வாக்கு எண்ணிக்கை மையத்தை விட்டு வெளியே வரக்கூடாது, எதிர் அணியினர் வாக்கு எண்ணிக்கையினை சீர்குலைக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு எண்ணும் நிலையங்களிலுள்ள முகவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பெரும்பான்மையான தொகுதிகளில் திமுகவின் வெற்றி உறுதியாகிதை தொடர்ந்து அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதுவரை 30 விழுக்காட்டிற்கும் குறைவான வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. பெரும்பான்மைத் தொகுதியில் தி.மு.கழகக் கூட்டணிக் கட்சிகள் முன்னிலை வகித்து வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டு இருப்பதையே தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி ஆட்சி அமைக்க இருப்பது தி.மு.க.தான் என்பது உறுதியாகிவிட்டது என்று அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வெற்றிச் சான்றிதழ் பெறும் வரைக்கும் எக்காரணம் கொண்டும் அனைத்து முகவர்களும் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறக் கூடாது என்றும் வாக்கு எண்ணிக்கையை முழுமையாக முடித்து, வெற்றிச் சான்றிதழைப் பெறுவதிலேயே குறியாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நமது வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட வெற்றியாகும். இருப்பினும் கொரோனா என்ற பெருந்தொற்று காலம் என்பதால் தொண்டர்கள் அனைவரும் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். வெற்றிக் கொண்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஸ்டாலின் பேட்டுக்கொண்டுள்ளார்.

”திமுகவின் வரலாற்றில் புதியதோர் அத்தியாயம் தொடங்க இருக்கிறது. நம்மையும் பாதுகாத்து, நாட்டையும் பாதுகாப்போம்” என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.