உலகளாவிய அச்சுறுத்தலை அதிகரித்துள்ள ஒமிக்ரோன் தொற்றை கட்டுப்படுத்த பூஸ்டர் டோஸ் தேவையா என்பது உறுதியாகாத நிலையில், பல பணக்கார நாடுகள் அதிகளவில் தடுப்பூசிகளை மறைத்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.
நாடுகளின் இந்த செயல் உலகம் முழுவதும் தடுப்பூசி விநியோகத்தில் சமத்துவமின்மையை அதிகரிக்கும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தடுப்பூசி பிரிவின் தலைவர் கேட் ஓ பிரையன் எச்சரித்தார்.
பணக்கார நாடுகள் மில்லியன் கணக்கான தடுப்பூசிகளை மறைத்து வைத்திருக்கும் அதேநேரம், சில ஏழை நாடுகளில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசியின் ஒரு டோஸ்ஸை கூட வழங்குவது கடினமாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த சில மாதங்களில் பணக்கார நாடுகள் தடுப்பூசிகளை வழங்க முன்வந்ததையடுத்து உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி ஏற்றத்தாழ்வு குறைந்திருந்தது.
இருப்பினும், ஒமிக்ரோன் மாறுபாட்டின் அச்சம் காரணமாக பணக்கார நாடுகள் தேவையில்லாமல் தடுப்பூசிகளை சேகரிப்பதன் மூலம் நிலைமை மாறிவிட்டதாக கேட் ஓ பிரைன் குறிப்பிட்டார்.
இதனிடையே கொரோனாவின் ஏனைய மாறுபாடுகள் மற்றும் வீரியமிக்க ஒமிக்ரோன் மாறுபாடு ஆகியவற்றிலிருந்து முழுமையான பாதுகாப்பு பெற தடுப்பூசியின் மூன்று டோஸ்கள் தேவை என உலகின் முன்னணி தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான பைசர் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.