November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“ஒமிக்ரோன் சில வாரங்களுக்குள் இங்கிலாந்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடும்”

கொவிட் வைரஸின் புதிய மாறுபாடான ஒமிக்ரோன் சில வாரங்களில் இங்கிலாந்தில் ஆதிக்கம் செலுத்தும் கொவிட் மாறுபாடாக மாறும் என கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் தொற்று நோய்களின் நிபுணரான பேராசிரியர் பால் ஹன்டரின் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஒமிக்ரோன் “டெல்டா மாறுபாட்டை விட வேகமாக பரவுகிறது” என கூறியுள்ள அவர், தென்னாப்பிரிக்காவில் விரைவான அதிகரிப்பை காண முடிவதாகவும் குறிப்பிட்டார்.

இங்கிலாந்தில் இது எவ்வளவு வேகத்தில் பரவும் என்பதை நிச்சயமாக கூறமுடியாத போதிலும் தற்போதைய அறிகுறிகள் இது மிக விரைவாக பரவி டெல்டா பரவலை விஞ்சத் தொடங்கும் என அவர் கூறினார்.

மேலும் அடுத்த ஒரு மாதத்திற்குள் அல்லது குறைந்தபட்சம் இங்கிலாந்தில் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக மாறும் என தாம் எண்ணுவதாகவும் இந்த மாறுபாடு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை கணிக்க முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இங்கிலாந்தின் சுகாதார பிரிவினரால் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையின்படி 246 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டபோதும் நாட்டில் ஏற்கனவே 1,000 க்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக ஹன்டர் மதிப்பிடுகிறார்.