November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் வைரஸின் தோற்றத்தை ஆராய புதிய குழுவை நியமித்தது உலக சுகாதார ஸ்தாபனம்!

கொவிட் வைரஸின் தோற்றத்தை தீர்மானிக்க தமக்கு கிடைத்துள்ள “கடைசி வாய்ப்பு” இது என்று உலக சுகாதார ஸ்தாபனம் புதன்கிழமை (14) தெரிவித்தது.

இதற்காக கொவிட் தொற்று தொடர்பான முதலாவது தொற்றாளரின் தகவல்களை வழங்குமாறு சீனாவை உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.

கொவிட் வைரஸின் தோற்றம் பற்றி ஆராய்வதற்கான புதிய அறிவியல் ஆலோசனைக் குழுவின் 26 உறுப்பினர்களை உலக சுகாதார ஸ்தாபனம் புதன்கிழமை பெயரிட்டது.

இந்த குழுவில் வுகானில் நடந்த கூட்டு விசாரணையில் பங்கேற்ற மரியன் கூப்மன்ஸ், தியா ஃபிஷர், ஹங் நுயென் மற்றும் சீன விலங்கு சுகாதார நிபுணர் யாங் யுங்குய் ஆகியோர் அடங்குகின்றனர்.

இதன் போது பேசிய உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ், கொவிட் வைரஸ் தோற்றம் தொடர்பான முதல் நாட்களின் மூல தரவு பற்றாக்குறையால் விசாரணை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வக தணிக்கைக்கு அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்தார்.

கொவிட் வைரஸ் தொடர்பான உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொழில்நுட்ப குழுவின் அதிகாரியான மரியா வான் கெர்கோவ், வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு எவ்வாறு பரவியது என்பதை அறிய இன்னும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார்.

இதனிடையே ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான சீனாவின் தூதுவர் சென் சூ, ஒரு செய்தியாளர் மாநாட்டில் கூட்டு ஆய்வின் முடிவுகள் “மிகவும் தெளிவாக உள்ளன” என தெரிவித்தார்.

கொவிட் தொற்றுக்குள்ளான முதல் நபர் மத்திய சீன நகரமான வுஹானில் டிசம்பர் 2019 இல் பதிவாகியது.

சீனாவின் ஆய்வகங்களில் ஒன்றிலிருந்து வைரஸ் கசிந்தது என்று கோட்பாடுகளை சீனா மீண்டும் மீண்டும் நிராகரித்து வருகின்றது. மேலும் ஆய்வுகளை நடத்துவதற்கு சர்வதேச விஞ்ஞானிகளுடன் ஒத்துழைக்க சீனா மறுத்து வருகின்றது.