May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிசக்தி செயற்றிட்டங்களுக்கு 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய சீனா திட்டம்!

(photo : mfa.gov.lk)

இலங்கையில் 400 மெகா வோட்ஸ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்றிட்டங்களுக்கு 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய சீனா முன்வந்துள்ளது.

சீனாவின் தேசிய எரிசக்தி பொறியியல் மற்றும் கட்டுமான கம்பனி லிமிட்டெட் (CNEE) இந்த முதலீட்டை மேற்கொள்கின்றது.

இச்செயற்றிட்டத்திற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் அனுபவ அறிவுகள் ‘கே.இ. எலெக்ரிக்’ நிறுவனத்தினால் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஷிஜியாஸுவாங்கில் உள்ள, மின்சாரத்தை உருவாக்குவதற்கும் விநியோகிப்பதற்கும் தேவையான பலவகையான உபகரணங்களை உற்பத்தி செய்யும் பாரிய ‘கே.இ. எலெக்ரிக்’ தொழிற்சாலைக்கு சீனத் தூதுவர் கலாநிதி கோஹன விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன் போது, 2030 ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க மூல வளங்களிலிருந்து இலங்கைக்கு தேவையான 70 சதவீத மின்சாரத்தை உற்பத்தி செய்யவுள்ள அரசாங்கத்தின் கொள்கை பற்றி, கலாநிதி கோஹன ‘கே.இ.எலெக்ரிக்’ இன் தலைவர் திரு.செங்க்சுவோ ஸாங்கிற்கு விளக்கினார்.

இந்நோக்கத்திற்கென அரசாங்கத்தால் சில இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்கம் முதலீட்டாளர்களை எதிர்பார்த்துள்ளதாகவும், எந்தவொரு செயற்றிட்டங்களுக்குமான நிதிகளுக்கு கடன்கள் பெறப்படாதெனவும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கு சாத்தியமான இடங்கள் குறித்து ‘கே.இ. எலெக்ரிக்’ உடன் இணைந்து, ஏற்கனவே சில ஆரம்ப வேலைகளை செய்த CNEE அதன் முன்மொழிவுகளை வைப்பதற்கான நடைமுறைகளை செய்து வருகிறது.

முன்மொழியப்பட்ட CNEE செயற்றிட்டமானது, அரச – தனியார் பங்குடைமை (Build-Own-Operate9) அல்லது அரச – தனியார் பங்குடைமை மற்றும் மாற்றுதல் (Build-Own-Operate and Transfer) அடிப்படையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சீனாவுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்தது.