July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க உலக நாடுகள் முன்வர வேண்டும்’: மிச்செல் பச்செலெட்

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலெட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது அமர்வில் வாய்மொழி மூல அறிக்கை சமர்ப்பித்து உரையாற்றும் போதே, அவர் இதனைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் மக்கள் வன்முறை மற்றும் உரிமை மீறல்களுக்கு உட்பட்டு வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

142 பொதுமக்களின் மரணத்துக்குக் காரணமான காபூல் விமான நிலைய தாக்குதலுக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவை கண்டனம் வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் ஏனைய மதக் குழுக்களின் பாதுகாப்பு சவாலுக்கு உட்பட்டுள்ளதாகவும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

ஆப்கான் அரச ஊழியர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கியதும், பின்னர் அவர்களின் வீடுகளை சோதனைக்கு உட்படுத்தியதும் தாலிபான்கள் வழங்கிய வாக்குறுதிகளை மீறுவதாக அமைந்துள்ளதாக மிச்செல் பச்செலெட் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஐநா அதிகாரிகளுக்கு ஒத்துழைத்த ஆப்கானியர்கள் மற்றும் அரச சார்பற்ற ஊழியர்களை அச்சுறுத்தக் கூடாது என்று ஐநா மனித உரிமைகள் பேரவை தாலிபான்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

தாலிபான்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளின் கல்வியைப் பாதிக்கக்கூடிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் பச்செலெட் குறிப்பிட்டுள்ளார்.

தாலிபான் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி, தாக்குதல் நடத்திய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆண்களைப் போன்றே பெண்களுக்கும் அனைத்து வகையான அடிப்படை உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.