உலகில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி ஏற்றியுள்ளதையடுத்து கொவிட் நோய்த் தொற்றுடன் அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தடுப்பூசிகள் மற்றும் உயிரியல் துறையின் பணிப்பாளர் டாக்டர். கேட் ஓ பிரையன், ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கொவிட் தொற்று பரவலை தடுப்பதில் மற்றும் நோயின் தீவிரத்தை குறைப்பதில் தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக கூறியுள்ளார்.
தடுப்பூசி போடுவதால் எந்தவொரு நோயிலிருந்தும் 100 சதவிகிதம் மக்கள் பாதுகாப்பு பெறுவதில்லை. அதேபோன்று கொவிட் தடுப்பூசியும் கொவிட் தொற்றிலிருந்து நூறு சதவீதம் பாதுகாப்பு வழங்காது எனினும் இது அதிக திறனுடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தடுப்பூசி எடுத்துக் கொண்டதன் பின்னர் கொவிட் தொற்றுக்குள்ளான நபர்களிடமிருந்து ஏனையோருக்கு வைரஸ் பரவலடையும் காலம் குறைவடைவதோடு,அதன் எண்ணிக்கையும் மிகக் குறைவு என்பதால் வைரஸ் பரவுவதை தடுப்பூசி குறைக்கிறது என்றும் அவர் கூறினார்.
தடுப்பூசிகள் இருவேறு வழிகளில் செயல்படுகின்றன.முதலில், தடுப்பூசி மக்களுக்கு நோய் வராமல் தடுக்கிறது. முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டதன் பின்னர் தொற்று ஏற்பட்டாலும், நோயின் தீவிரம் குறைவாக இருக்கும் எனவும் நிபுணர் குறிப்பிட்டார்.
எனினும் மக்கள் கொவிட் தொற்றை தவிர்ப்பதற்கான ஏனைய கட்டுப்பாடுகளை பின்பற்றாது விடுவதால் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கின்றது.
எனவே,உலகில் தாமதப்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசி திட்டங்கள் விரைவாக முன்னெடுக்கப்படுவதோடு,சுகாதார விதிமுறைகளையும் பின்பற்றுவது அவசியமானது என அவர் வலியுறுத்தினார்.