November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் தலிபான்கள் தாக்குதல்; 8 பேர் பலி!

காபூலில் உள்ள ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டின் மீது துப்பாக்கி தாரிகள் மேற்கொண்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

செவ்வாய்க்கிழமை இரவு குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதன் போது குண்டு தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட கடந்த ஒரு வருட காலத்தில் காபூல் நகரத்தில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட முதல் பெரிய தாக்குதல் இது என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பிஸ்மில்லா கான் முகமதி வீட்டில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலின் போது பாதுகாப்பு அமைச்சரின் குடும்பத்தினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதுடன், துப்பாக்கிதாரிகளில் நால்வர் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலின் பின்னால் தலிபான்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச தலைவர்களுக்கு எதிராக மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அந்த குழு எச்சரித்துள்ளது.

ஆப்கானில் நிலைகொண்டுள்ள சர்வதேச படைகளை திரும்ப அழைக்க, அரச படைகளுடன் ஒப்பந்தத்தை உருவாக்க அமெரிக்கா கடந்த பெப்ரவரியில் இணக்கம் வெளியிட்டிருந்தது.

இதன்படி 2021 செப்டம்பரில் அமெரிக்க படைகள் அங்கிருந்து மீள அழைக்கப்படுவர் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்திருந்தார்.

இதையடுத்து முக்கிய நகரங்களில் இருந்து ஏற்கனவே பெருமளவான சர்வதேச படைகள் வெளியேறியுள்ளன.

இந்த நிலைமையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ள தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும் அமெரிக்க படைகள், ஆப்கானிஸ்தானின் அரசு படைகளுக்கு ஆதரவாக இப்போதும் வான் வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

தலிபான்கள் ஹெராத், லஷ்கர் கா, காந்தஹார் ஆகிய மூன்று முக்கிய நகரங்களுக்குள் நுழைந்துள்ளதுடன், அங்குள்ள முக்கிய கட்டடங்களை கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே அவர்கள் ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர். இதில் ஈரான் மற்றும் பாகிஸ்தான் உடனான ஆப்கானிஸ்தானின் முக்கிய எல்லைப் பகுதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலிபான்கள் தொடர்ந்து தங்கள் தாக்குதல் மூலம் முன்னேறி வருவதால், வரும் மாதங்களில் பெரிய நெருக்கடி ஏற்படலாம் என மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது.