July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இரகசிய திருமணம் செய்து கொண்டார்!

(Photo : twitter/Boris Johnson)

பிரிட்டன் பிரதமர் போரிஸ்  ஜோன்சன் தனது காதலி ஹேரி சைமண்ட்ஸை இரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கதீட்ரலில் 30 விருந்தினர்களுடன் சனிக்கிழமை பிற்பகல் இந்த திருமணம் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து பிரிட்டனில் 200 ஆண்டுகளின் பின்பு பதவியில் இருக்கும் போது திருமணம் செய்த கொண்ட முதலாவது பிரதமராக இவர் பதிவாகியுள்ளார்.

இதற்கு முன்னதாக முன்னாள் பிரதமர் ராபர்ட் பேங்க்ஸ் ஜென்கின்சன் 1822 இல் பதவியில் இருந்த போது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

56 வயதான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனும் அவரின் காதலியான 33 வயதான ஹேரி சைமண்ட்ஸூம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களுக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதனைத் தொடர்ந்து தாம் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக இருவரும் அறிவித்திருந்தனர்.

எனினும் பிரிட்டனில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததையடுத்து அதனை கட்டுப்படுத்துவதில் பிதமர் போரிஸ் ஜோன்சன் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நி்லையிலேயே தற்போது அவர் இரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பிரதமர் ஜோன்சன்  இதற்கு முன் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

எனினும் இவரின் முந்தைய திருமணங்கள் ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு வெளியே நடந்திருந்ததால் விவாகரத்தின் பின் மறுமணம் செய்து கொள்ள ரோமன் கத்தோலிக்க திருச்சபை அனுமதிக்கிறது.

இதனிடையே அடுத்த கோடை விடுமுறையில் தம்பதியினர் தமது திருமணத்தை கொண்டாட எதிர்பார்த்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.