February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

பிரிட்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்.

இதில் ஏற்பட்ட வன்முறையில் எட்டு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்ததுடன் ஆர்ப்பாட்டத்ததில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் சுமார் 10,000 க்கு  மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொவிட் -19 கட்டுப்பாடு விதிகள் தேவையற்றவை என்றும் மனித உரிமை மீறல் என்றும் எதிர்ப்பாளர்கள் கருதுகின்றனர்.

ஊரடங்கு, தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளுதல், முகக்கவசம் அணிவது மற்றும் ‘தடுப்பூசி கடவுச்சீட்டு’ ஆகியவற்றுக்கு இதன் போது ஆர்ப்பாட்டகாரர்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.

எதிர்ப்பாளர்கள் “சுதந்திரம்” மற்றும் “உங்கள் முகக்கவசங்களை கழற்றுங்கள்” என்று கோஷங்களை எழுப்பியதுடன், பதாதைகளையும் ஏந்திச்சென்றனர்.

இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எட்டு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டமை உள்ளிட்ட குற்றங்களுக்காக ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆர்ப்பாட்டம் மற்றும் அதில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.