மேற்குலகின் செய்மதிகளை அழிக்ககூடிய ஏவுகணையொன்றை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சினால் உருவாக்கப்பட்ட செய்மதியை அழிக்ககூடிய ஏவுகணையின் வீடியோவொன்றை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.
கஜகஸ்தானின் சரிசஹான் பகுதியில் இந்த ஏவுகணையை ரஷ்யா பரிசோதனை செய்துள்ளது.புதிய ஏவுகணை தொடர்ச்சியான பல சோதனைகளின் போது தன்னுடைய இயல்பினை நிரூபித்துள்ளது என ரஷ்ய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் குறிப்பிட்ட ஏவுகணை பரிசோதனையின் போது தாக்கிய இலக்கு எது, அது பயன்படுத்திய ஆயுதங்கள் எவை போன்ற விபரங்கள் வெளியாகவில்லை.ரஷ்யா ஏற்கனவே இந்த ஏவுகணையை பரிசோதனை செய்து பார்த்தவேளை இந்த ஏவுகணையால் அமெரிக்காவின் விண்வெளி நலன்களிற்கு ஆபத்துள்ளது என அமெரிக்காவின் முக்கிய அதிகாரியொருவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ரஷ்யாவின் இந்த ஏவுகணை செய்மதிகளை அழிக்ககூடியது என்றும் அமெரிக்காவினதும் அதன் சகாக்களினதும் விண்வெளி முயற்சிகளிற்கு இதனால் ஆபத்து அதிகரிக்கின்றது என்றும் அந்த அதிகாரி எச்சரித்திருந்தார்.
இதேவேளை அணுவாயுத யுத்தம் மூளும்பட்சத்தில் அமெரிக்க நகரங்களை அழிக்ககூடிய ஆயுதத்தையும் ரஷ்யா பரிசோதனை செய்துள்ளது.6000 எம்பிஎச் ஹைப்பர்சோனிக் ஜிர்கோன் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
அணுவாயுத யுத்தமொன்று ஏற்பட்டால் அமெரிக்காவின் நகரங்களை அழிப்பதற்காக ஜனாதிபதி புட்டினின் ஆயுதம் இதுவென மொஸ்கோவின் அரசகட்டுப்பாட்டில் உள்ள தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
வெள்ளை கடல் பகுதியிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை 279 மைல்கள் பயணித்து பேரன்ட்ஸ் கடற்பரப்பில் உள்ள தனது இலக்கை வெற்றிகரமாக தாக்கியதுஎன ரஷ்யா தெரிவித்துள்ளது.
நள்ளிரவில் கடற்படை கலமொன்றிலிருந்து இந்த ஏவுகணை ஏவப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.