நாடு இக்கட்டான நிலைக்கு முகம் கொடுத்துள்ளதற்கு மத்தியில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ நத்தார் பண்டிகையை கொண்டாட அமெரிக்கா சென்றுள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ள போதிலும் எவ்வித தடையுமின்றி நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்காக நிதியமைச்சர் இவ்வாறு சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 15 ஆம் திகதி தம்புத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
தற்போது டொலர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் துறைமுகத்தில் விடுவிக்க முடியாத கொள்கலன் பிரச்சினை உக்கிரமடைந்துள்ளதாகவும் அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.
நாடு முழுவதும் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள அதேவேளை, யுகதனவி அனல் மின் நிலையத்தின் ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சை உச்சத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான ஒரு சூழலில் நாட்டின் நிதியமைச்சர் தனிப்பட்ட விடயங்களுக்காக வெளிநாடு செல்வது சரியல்ல என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.