July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான பெண் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை’

‘ஒமிக்ரோன்’ வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள இலங்கை பெண் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர ஆய்வில் வெளிப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவருடன் தொடர்பை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனையில் எந்த மாதிரியிலும் வைரஸ் இருப்பதாக சந்தேகிக்கப்படும் விகாரங்கள் கண்டறியப்படவில்லை என ஜீவந்தர குறிப்பிட்டார்.

இது தொடர்பான இறுதி அறிக்கை நாளை (5) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கையளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆபிரிக்க நாடொன்றில் இருந்து அண்மையில் நாடு திரும்பியிருந்த இலங்கை பெண் ஒருவருக்கு கொவிட் வைரஸின் புதிய மாறுபாடான ‘ஒமிக்ரோன்’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று (03) அறிவித்தது.

இவ்வாறு தொற்றுக்குள்ளானவர் மாரவில பிரதேசத்தை சேர்ந்த 25 வயது பெண் எனவும் இவர் நைஜீரியாவிலிருந்து நவம்பர் 24 ஆம் திகதி இலங்கை திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தென்னாபிரிக்கா நவம்பர் 24 அன்று உலக சுகாதார நிறுவனத்திற்கு (WHO) புதிய மிகவும் மாற்றமடைந்த SARS-CoV-2 மாறுபாடு குறித்து எச்சரித்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் ஜப்பான் உட்பட 30 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த மாறுபாட்டை கண்டறிந்துள்ளன.