இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று தெரிவித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக அவர் அடுத்த சில நாட்களில் இந்தியாவுக்கு விஜயம் செய்வார் என பீரிஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.
கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடனான அட்டவணைக்கு அமைய இந்த விஜயம் முன்னெடுக்கப்படுவதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் டொலர் கையிருப்பு குறைந்துள்ள நிலையில், எரிபொருள் இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் டொலர் அவசர கடனுதவியைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தையை அரசாங்கம் ஆரம்பித்துள்ள பின்னணியில் நிதியமைச்சரின் இந்த விஜயம் முக்கியத்துவம் பெறுகின்றது.
எவ்வாறாயினும், பசில் ராஜபக்ஷ இந்தியாவிடம் கடன் கோரிக்கையை முன்வைக்கும் அதேவேளை, இந்திய முதலீட்டை அதிகரிக்க வேண்டுமெனவும் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் இலங்கைக்கு வலுவான உறவு உள்ளது. கடந்த காலங்களில் தேவை ஏற்பட்ட போதெல்லாம், இலங்கையின் உதவிக்கான அழைப்புகளுக்கு இந்தியா தாராளமாக இருந்தது எனவும் பீரிஸ் நினைவு கூர்ந்துள்ளார்.