July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை” – இலங்கை பெட்ரோலிய சேமிப்பு முனையம்!

நாட்டில் “எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை”. எனவே வீணாக குழப்பமடைந்து எரிபொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட வேண்டாம் என இலங்கை பெட்ரோலிய சேமிப்பு முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை களஞ்சியசாலைகளில் போதிய அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும் நாட்டில் தற்போது எரிபொருள் விநியோகம் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று (17) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டுக்கு தேவையான எரிபொருள் தற்போது எண்ணெய் கிடங்குகளில் உள்ளது என்பதை மிகவும் பொறுப்புடன் மக்களுக்கு அறியத்தருவதாகவும் அவர் கூறினார்.

தற்போது கூட 40,000 மெற்றிக் தொன் டீசல் முத்துராஜவெலயில் இறக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர் மேலும் நாளை (18) 36,000 மெட்ரிக் தொன் பெட்ரோலை இறக்குமதி செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு எதிர்வரும் 19 ஆம் திகதி மீண்டும் 40,000 மெற்றிக் தொன் டீசல் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய சேமிப்பு முனையத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மக்கள் சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்ள எரிபொருள் நிலையங்களுக்கு முன்னால் காத்திருந்ததை காணமுடிந்தது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை நிலையங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான எரிவாயு சிலிண்டர்களே வழங்கப்படுவதால் எரிபொருள் சிலிண்டர்கள் உடனடியாக முடிந்து விடுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டர்களை நிரப்புவதற்காக தாம் காத்திருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் கூறுகின்றனர்.