போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை நடத்துவத்துவதற்காக மாத்திரம் புதிய பொதுமைப்படுத்தலை எதிர்க்கட்சியினர் பயன்படுத்துவது கவலையளிக்கிறது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் எதிர்காலத்துக்காக சரியானவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை விடுத்து, அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சியினரின் மனோபாவத்தைத் தான் எதிர்பார்க்கவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பித்துள்ளார்.
இதேவேளை நாடு திறக்கப்பட்டதும் போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் காரணமாக மீண்டும் கொவிட் தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டை மீண்டும் ஒருமுறை முடக்க நேரிடலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், பொதுமக்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் புரிந்துகொண்டு நடக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
உலக விஞ்ஞான தினத்தையொட்டி, இலங்கையின் தேசிய விஞ்ஞான தினம் மற்றும் விஞ்ஞான வாரத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு, அலரிமாளிகையில் இன்று இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.