இலங்கை முழுவதும் இந்துக்களால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந் நிலையில், இலங்கையிலும் கொரோனா தொற்று அச்ச நிலையிலும் மக்கள் தீபத் திருநாளை கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில் வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் தீபத்திருநாள் விசேட பூஜைகள் இடம்பெற்றுள்ளன.
இதில் பெருமளவான பக்தர்கள் வழிபாடுகளில் பங்கேற்றிருந்தனர்.
மன்னாரில்
அதேநேரம், தீபாவளியை முன்னிட்டு மன்னாரில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி முகக்கவசங்கள் அணிந்தவாறு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
குறிப்பாக மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு மஹா ஸ்ரீ கருணாநந்த குருக்கள் தலைமையில் காலை 8 மணியளவில் தீபாவளி விசேட பூஜை இடம்பெற்றது.
கொரோனா தொற்றில் இருந்து விரைவில் நாடு விடுபடவும் தீபாவளி மக்களுக்கு சந்தோசத்தையும் செழிப்பையும் வழங்க வேண்டியும் விசேட பூஜை வழிபாடு இடம் பெற்றது.
இதேவேளை, மலையகத்திலும் மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீபாவளி பண்டிகையை விமர்சையாக கொண்டாடினார்கள்.
மலையகத்தில்
ஹட்டன் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் ஸ்ரீ பூர்ணசந்திராநந்த குருக்கள் தலைமையில் தீபாவளி விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.
விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை
மேலும், திருகோணமலை மாவட்டத்தில் தீபாவளி பூசை வழிபாடுகள் சுகாதார நடைமுறைகளுக்கமைய சிறப்பாக நடைபெற்றன.
திருகோணமலை காளி கோவிலில் தீபாவளியினை முன்னிட்டு சிறப்பு பூசை வழிபாடுகள் நடைபெற்றதுடன், விசேட பூசையினை காளி கோயிலின் ஸ்தாபகர் வேதாகமாமணி சோ. இரவிச்சந்திர குருக்கள் நடத்தினார்கள்.
பொது மக்கள் புத்தாடைகள் அணிந்து கோவிலுக்கு சென்று தமது வழிபாடுகளை மேற்கொண்டார்கள்.