சிகரெட்டுகளின் விலையை அதிகரிப்பதற்கான விலை சூத்திரமொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்த விலை சூத்திரம் சுகாதார அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டு, விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சிகரெட்டிற்கான வரிகளை அதிகரிப்பதற்கான முன்மொழிவாக எதிர்வரும் வரவு – செலவு திட்டத்தில் இந்த விலை சூத்திரத்தை சேர்ப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்த விலை சூத்திரத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் சிகரெட் ஒன்றின் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கும் எனவும் 2026 இல் இது 20 ரூபாவினால் அதிகரித்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் சிகரெட்டின் விலை அதிகரித்த போதிலும் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காத காரணத்தால் இத்தகைய விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தோடு, சிகரெட் விலை இவ்வாறு அதிகரிக்கப்படுவதன் காரணமாக புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைவடையலாம் எனவும் புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டார்.