சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை பெற்ற தெரிவு செய்யப்பட்ட தரப்பினருக்கு மூன்றாவது டோஸாக பைசர் தடுப்பூசி செலுத்த கொள்கை அடிப்படையில் நிபுணர் குழு பரிந்துரை வழங்கியுள்ளது.
அதன்படி, 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 30-59 வயதுக்குட்பட்டவர்களில் நீண்ட நாள் நோய் நிலைமை உடையவர்களுக்கும் இவ்வாறு 3 வது டோஸ் பைசர் தடுப்பூசியை வழங்க தொற்று நோய்களுக்கான ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.
எனினும் “இது தொடர்பான இறுதி முடிவு சரியான நேரத்தில் சுகாதார அமைச்சால் எடுக்கப்படும் எனவும் அதன் பிறகு தொடர்புடைய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும்” எனவும் சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
அத்தோடு தெரிவு செய்யப்பட்ட மக்கள் தொகைக்கு தேவையான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டதன் பின்னர் 3 வது டோஸ் தடுப்பூசியை நிர்வகிப்பதற்கான முடிவுகள் இறுதி செய்யப்படும் எனவும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறினார்.
இதனிடையே, அனைத்து சுகாதார மற்றும் முன்களப் பணியாளருக்கு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் வழங்க தொற்று நோய்களுக்கான ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.
இதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3 வது டோஸ் வழங்க 14 மில்லியன் டோஸ் பைசர் தடுப்பூசி ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் செப்டம்பர் இறுதிக்குள் 800,000 டோஸ் பைசர் தடுப்பூசி இலங்கைக்குள் வர உள்ளதாகவும் அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.