November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யொஹானி டி சில்வாவுக்கு இந்திய தூதரகம் அறிவித்த புதிய பதவி

(Photo: twitter/@yohanimusic)

இலங்கையின் பிரபல பாடகி யொஹானி டி சில்வாவை  இந்திய தூதரகம் கலாசார தூதுவராக அறிவித்துள்ளது.

“இந்தியாவின் தேசிய தொலைக்காட்சி சேவைகளில் புதிய கலாசாரத் தூதுவர் யோஹானி டி சில்வா தோன்றுவதில் பெருமிதம் கொள்கிறோம்” என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

“யூடியூப்பில் 110 மில்லியனுக்கும் அதிக தடவைகள் பார்க்கப்பட்ட ‘மெனிகே மகே ஹிதே’பாடல், பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை இந்தியாவில் பல மில்லியன் மக்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது. இது, பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையானதும் உண்மையில் இயல்பானதுமான இந்திய இலங்கை உறவின் ஆழத்தை பிரதிபலிக்கின்றது” என்றும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யொஹானி நாளாந்தம் இந்திய தொலைக்காட்சி நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார்.

இதனால், இலங்கை- இந்தியாவுக்கு இடையேயான கலாசார பரிமாற்றம் நடைபெறுகிறது.

இதனை அவதானித்த இலங்கைக்கான இந்திய தூதரகம், யோஹானியை கலாசாரத் தூதுவராக அறிவித்துள்ளது.

யொஹானி டி சில்வா பாடிய ‘மெனிகே மகே ஹிதே’ பாடல் தமிழ், மலையாளம் இந்தி மற்றும் பெங்காலி மொழிகளில் வெளியிட்டப்பட்டதையடுத்து உலக அளவில் ரசிகர்களை கவர்ந்தது.

இந்த பாடல் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின், காலியா திரைப்பட பாடலுடன் ரீமேக் செய்யப்பட்டு, வீடியோவாக வெளியானதையடுத்து இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த பாடலை கேட்டு, தாம் மிகவும் ரசித்ததாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.