July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

100,000 கிலோ கிராம் மஞ்சளை குறைவான விலையில் விற்பனை செய்ய அரசாங்கம் திட்டம்!

100,000 கிலோகிராம் மஞ்சளை குறைவான விலையில் மக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக ஜெனரல் தமயந்தி கருணாரத்ன தெரிவித்தார்.

நாட்டில் பல சந்தர்ப்பங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கிட்டத்தட்ட 100,000 கிலோகிராம் மஞ்சளே இவ்வாறு மசாலா சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும்  இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஜெனரல் தமயந்தி கருணாரத்ன தெரிவித்தார்.

கடந்த மாதம் சுங்கச் சாவடிகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 18,500 கிலோ கிராம் மஞ்சள் தூளும் 81,500 உலர் மஞ்சள் துண்டுகளும் இவ்வாறு மசாலா சபையால் பொது மக்களின் பாவனைக்காக வெளியிடப்பட உள்ளதாக தமயந்தி கருணாரத்ன கூறினார்.

மீட்கப்பட்ட மஞ்சள் நுகர்வுக்கு ஏற்றதா என மசாலா சந்தைப்படுத்தல் சபையால் ஆராயப்பட்டு வருவதாக சபையின் தலைவர் குமுதுனி குணசேகர தெரிவித்தார்.

பரிசோதனையின் பின்னர் மசாலா சந்தை சபைமற்றும் சதொச மூலம் தற்போது விற்கப்படும் விலையை விடவும் குறைந்த விலையில் மஞ்சளை விற்பனை செய்ய எதிர்பார்ப்பதாகவும் குமுதுனி குணசேகர குறிப்பிட்டார்.