எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து காரணமாக உயிரிழந்த கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் சார் சூழலுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என்று சட்டமா அதிபர் வெள்ளிக்கிழமை (06) நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
கடல்சார் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, வனவிலங்கு துறை மற்றும் அரசு ஆய்வாளர் துறை ஆகியவை இணைந்து விசாரணைகளை நடத்தி வருவதாக சட்டமா அதிபர் இதன் போது கூறினார்.
இலங்கையின் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலிலிருந்து வெளியான இரசாயனங்கள் மற்றும் எரிபொருள் கசிவு காரணமாக கிட்டத்தட்ட ஆயிரம் உயிரினங்களின் உடல்கள் கரை ஒதுங்கியிருந்தன.
இது தொடர்பான வழக்கு வெள்ளிக்கிழமை (06) கொழும்பு பிரதான மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது, சில வாரங்களுக்கு முன்பு ஹம்பாந்தோட்டை துறைமுக பகுதியில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட கப்பல் நிறுவனத்திடமிருந்து 15 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலின் உள்நாட்டு முகவர் மற்றும் தலைமை மாலுமி, தமக்கும் அது போன்ற இழப்பீட்டை வழங்க அனுமதிக்குமாறு கோரியது.
இதனிடையே தற்போதுள்ள சட்டங்களின் அடிப்படையில் எண்ணெய் கசிவுக்கான இழப்பீடாக அதிக பட்சமாக ரூ. 15 மில்லியன் ரூபா விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து குறித்த விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என்று சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விசாரணைகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கையை செப்டம்பர் 28 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு புலனாய்வாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் நிறுவனம், கப்பல் விபத்து காரணமாக சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு ஏற்கனவே இடைக்கால இழப்பீடாக 720 மில்லியனை வழங்கியுள்ளது.