July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“பால் மா விலையை அதிகரிக்கும் எண்ணமில்லை”: இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத்

பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கான எந்த தேவையும் இல்லை என கால்நடை, பண்ணை ஊக்குவிப்பு மற்றும் பால், முட்டைத் தொழில்கள் இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பால் மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை குறித்தும், அதன் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்தும் கண்டியில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாட்டின் பால்மா தேவையில் 40 வீதம் மட்டுமே உள் நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர் 60 வீதமான பால்மா வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பாவனையை ஊக்குவிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த 2-3 ஆண்டுகளில் நாடு பால் உற்பத்தியில் தன்னிறைவு அடையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் தற்போது பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கான எந்த தேவையும் இல்லை எனவும் இது தொடர்பில் நுகர்வோர் அச்சப்படத் தேவையில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.