“அஸ்ட்ரா செனிகா” கொரோனா தடுப்பூசியை 1 வது டோஸாக பெற்றுக் கொண்ட 70 வயதிற்கு மேற்பட்டவர்கள், ஒரு வாரத்திற்குள் அதே தடுப்பூசியின் 2 வது டோஸை பெற முடியும் என கொழும்பு மாநகர சபையின் பிராந்திய தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் தினுக குருகே தெரிவித்துள்ளார்.
நாட்டில் முதலாவது டோஸாக “அஸ்ட்ரா செனிகா” தப்பூசி போட்டுக் கொண்ட 6 லட்சம் பேர் வரை 2வது டோஸ் தடுப்பூசிக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், அடுத்த ஒரு வாரத்துக்குள், கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 2 வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள குறுந்தகவல் அல்லது தொலைபேசி மூலம் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதில் தடுப்பூசி வழங்கப்படும் திகதி, நேரம் மற்றும் இடம் ஆகியவை அறிவிக்கப்படும் என்றார்.
இவ்வாறு தடுப்பூசிக்கான அறிவித்தலை பெற்றுக் கொண்டவர்கள் குறுந்தகவல் அல்லது தேசிய அடையாள அட்டை அல்லது தடுப்பூசி அட்டை ஆகியவற்றை காண்பித்து தமக்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் கூறினார்.
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் 70 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த வாரத்திற்குள் தடுப்பூசி போடப்படுவதால் தேவையற்ற பீதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் தினுக குருகே கேட்டுக் கொண்டார்.