May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசிகளை பெற்றுத் தருமாறு உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அமைச்சர் வாசுதேவ கோரிக்கை

இலங்கையில் ‘அஸ்ட்ரா செனிகா’ கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உலக சுகாதார ஸ்தாபனமும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாட்டில், ‘அஸ்ட்ரா செனிகா’ கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட 600000 பேர் இரண்டாவது டோஸை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளதாகவும் இந்த விவகாரம் மனித உரிமை மீறல் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் காணொளி பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், இந்த விடயம் தொடர்பில் இரு அமைப்புகளும் ஒன்றிணைந்து முடிவை பெற்றுத்தர முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

உலகின் பணமும் பலமும் பொருந்திய நாடுகள் அதிகளவில் ‘அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசிகளை வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசிகளை வைத்திருக்கும் தனியார் நிறுவனங்கள் அதிக விலைக்கு அவற்றை விற்பனை செய்ய முன்வந்துள்ள போதிலும் அந்த தடுப்பூசிகள் குறித்த உறுதிப்படுத்தல் இல்லாததன் காரணமாக அவற்றை கொள்வனவு செய்ய முடியாது எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.