July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு விடயத்தில் அரசாங்கம் மக்களை ஏமாற்றி வருகின்றது’; செல்வம் அடைக்கலநாதன்

நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை அரசு உரிய முறையில் வழங்காது மக்களை ஏமாற்றி வருவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (20) மன்னாரிலுள்ள டெலோ அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை அரசு உரிய முறையில் வழங்காது ஏமாற்றி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், பிரித்தானியாவில் வாழ்கின்ற யோகன் விஸ்வநாதன் என்பவரினால் வன்னி மாவட்டத்தில் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதியை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு அரசாங்கம் 5 ஆயிரம் ரூபாய் வழங்குவதாகவும், உலர் உணவு பொருட்களை வழங்குவதாகவும் கூறி ஏமாற்றுகின்றது.

இந் நிலையில் வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற மக்கள் இலங்கை அரசாங்கத்திடம் கையேந்த கூடாது என்பதற்காக புலம் பெயர்ந்த உறவுகள் பாரிய உதவிகளை செய்து வருவதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு எமது மக்கள் அரசிடம் கையேந்தும் நிலையை மாற்ற புலம் பெயர்ந்த உறவுகள் எம் மக்களுக்கு கை கொடுக்க வேண்டும்.

நாட்டில் பயணத்தடை ஏற்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சமுர்த்தி பெற்றுக் கொள்ளும் குடும்பங்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தெரிவித்திருந்தனர்.

ஆனால், சமுர்த்தி பெற்றுக் கொள்ளுகின்றவர்களுக்கு மாத்திரமே குறித்த 5 ஆயிரம் ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த நிலையிலே அனைத்துக் கட்சிகளும் இணைந்து புலம் பெயர் மக்களின் உதவிகளுடன் நிவாரண உதவியை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.