கொழும்பு துறைமுகத்துக்கு அருகாமையில் தீப்பரவல் விபத்துக்குள்ளாகி மூழ்கிக்கொண்டிருக்கும் ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலில் இருந்து வெளியாகும் கழிவுப் பொருட்கள் மற்றும் இரசாயன பதார்த்தங்கள் காரணமாக நாளுக்கு நாள் கடல்சார் உயிரினங்களுக்கு மிகப் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றது.
இந்த நிலையில், நேற்றுடன் (13) நிறைவடைந்த இரு வாரங்களில் 28 கடலாமைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில் குறிப்பாக, இலங்கைக்கே உரித்தான கடலாமைகளும் உள்ளடங்குவதாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்தது.
இதனிடையே, ஐந்து டொல்பின் மீன்களின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த ஆமைகள் மற்றும் டொல்பின் மீன்கள் வெள்ளவத்தை, தெஹிவளை, மொறட்டுவை, எகொட உயன, பாணந்துறை, கொஸ்கொட, இந்துருவ, காலி, உனவட்டுன, குடாவெல்ல, மாரவில மற்றும் துடுவாவ ஆகிய இடங்களில் கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இவ்வாறு கரையொதுங்கிய இரண்டு ஆமைகள் தற்போது கால்நடை வைத்திய பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலின் தாக்கத்தால் கடலாமைகள், டொல்பின்கள் தவிர, ஒட்டுண்ணிகள், மீன்கள் மற்றும் கடலோர பறவைகளும் உயிரிழந்து வருவதாக வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேநேரம், கடல்சார் உயிரினங்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பாக கடல் சுற்றுச்சூழல் மற்றும் கடலோரப் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மத்திய சுற்றுச் சூழல் அதிகார சபை ஆகியன குறித்த கப்பல் நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.