ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 600,000 டோஸ் ‘அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசிகளை பெற்றுத் தருமாறு ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகாவிடம் விடுத்துள்ள கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது.
இன்று (09) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் இலங்கைக்கான ஜப்பானிய தூதர் சுகியாமா அகிரா இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் முதலாவது டோஸாக ‘ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசியை பெற்றுக்கொண்ட 600,000 பேர் தங்களது 2 வது டோஸ் தடுப்பூசிக்காக காத்திருக்கின்ற நிலையில், அரசாங்கம் அவர்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக் கொடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அத்தோடு, இலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ மற்றும் சுகாதார உபகரண உதவிகளை வழங்குவதற்கும் ஜப்பான் அரசு இணங்கியுள்ளதாக அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ‘எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கு தேவையான உடனடி தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக் கொள்வது குறித்து ஜனாதிபதி, ஜப்பான் தூதரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.