இரு வேறுபட்ட தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்வதால் ஆரோக்கியமான விளைவுகள் வெளிப்படுமென இதுவரை எந்த ஆய்வின் ஊடாகவும் உறுதியாகவில்லை என்று தடுப்பூசி பரிசீலனை விவகாரங்களுக்கு பொறுப்பான நிபுணரும் வைத்தியருமான ரஜீவ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதேநேரம் கலப்பு தடுப்பூசிகளை பயன்படுத்தினால் அதன் மூலமாக ஏற்படும் விளைவுகள் எதுவாகவும் இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெவ்வேறு நோய்களில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது ஆரோக்கியமானதல்ல என்று ரஜீவ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய ரீதியில் தற்போதுள்ள தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக ஒக்ஸ்போர்ட் அஸ்ராசெனிகா தடுப்பூசியை பெற்றுக்கொள்வது சாத்தியமில்லாத விடயமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆகவே முதலாம் தடுப்பூசியாக ஒக்ஸ்போர்ட் அஸ்ராசெனிகா தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களுக்கு இரண்டாவதாக மாற்று தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பது குறித்த ஆய்வுகளே அதிகளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஒரு சில நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளில் கலப்பு தடுப்பூசி ஏற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கும் இந்த அறிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் அவர்கள் மேலும் உறுதிப்படுத்தும் விதமாக இந்த விடயங்களை வெளியிடாமல் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கலப்பு தடுப்பூசிகளை பயன்படுத்தும் வேளையில் பக்க விளைவுகள் அதிகமாகும், இது மிக மோசமான விளைவுகள் அல்லாத நீண்ட நாட்கள் காய்ச்சல், உடல் வலி போன்றவை ஏற்படும் என கூறப்படுகின்றது.
ஆனால் நல்ல விளைவுகள் என்ன என்பது குறித்து எந்த தரவுகளும் இல்லை. அதாவது கலப்பு தடுப்பூசியை பயன்படுத்தினால் உடலில் இது சரியாக செயற்படுமா, வைரஸை கட்டுப்படுத்துமா என்பது குறித்த தரவுகள் எதுவும் இல்லை.
பல்வேறு நாடுகளின் நிபுணர்கள் வெவ்வேறான கருத்துக்களையே முன்வைத்து வருகின்றனர். ஆனால் இதில் எந்த ஒரு கருத்தும் ஆய்வுகளுக்கு உற்படுத்தி வெளிப்படுத்திய கருத்துகள் அல்ல என்றும் வைத்தியர் ரஜீவ டி சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே எம்மால் இதனை அங்கீகரிக்க முடியாத நிலைமையே உள்ளது. முதலாம் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களுக்கு மாற்று தடுப்பூசி ஏற்றுவது பொருத்தமானதா என்ற விடயங்கள் குறித்து இன்னமும் நாம் ஆய்வுக்கு முடிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனால் கலப்பு தடுப்பூசி பயன்படுத்துவது நல்லதா என எங்களால் உறுதியாக கூற முடியாது. விளைவுகள் எதுவாகவும் மாறலாம் என்பதே எமது நிலைப்பாடு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அரசாங்கமே இந்த விடயத்தில் தரவுகளை சேகரித்து சரியான தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் வைத்தியர் ரஜீவ டி சில்வா தெரிவித்துள்ளார்.