இலங்கையில் தற்போது அமுலில் உள்ள முழுநேர பயணக் கட்டுப்பாடு நாளை அதிகாலை 4 மணி முதல் தளர்த்தப்படும் என்று கொவிட் தடுப்பு செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் மக்கள் வழங்கிய ஒத்துழைப்புக்காக மக்களுக்கு நன்றியை கூறிக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் முழுநேர பயணக் கட்டுப்பாட்டை நீக்கினாலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள், இரவு நேர பயணக் கட்டுப்பாடுகள் மே 31 ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என்றும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
கொவிட் தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக நீண்ட வார இறுதி விடுமுறை என்பதனால் கடந்த 13 ஆம் திகதி இரவு 11 மணி முதல் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையிலும் மூன்று நாட்களுக்கு முழு நேர பயணக் கட்டுப்பாட்டை விதிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி முன்னர் அறிவித்தவாறு நாளை அதிகாலை முதல் அந்த கட்டுப்பாடு நீக்கப்படும் என்று இராணுவத்தளபதி கூறியுள்ளார்.
அதுமாத்திரமன்றி, எதிர்வரும் 2-3 வாரங்களுக்கு மக்கள் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றி செயற்பட்டால், கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிய குறைவான அறிகுறிகளை வெளிக்காட்டுக்காட்டும் நோயாளிகளுக்கு வீடுகளில் வைத்த சிகிச்சை அளிப்பது தொடர்பிலான வழிகாட்டல்களை எதிர்வரும் சில தினங்களில் சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் வெளியிடப்படும் என இராணுவத் தளபதி கூறியுள்ளார்.