November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தான் பயணித்த வாகனம் அதிவேக வீதியில் விபத்துக்கு உள்ளானமை தொடர்பில் சுமந்திரன் சந்தேகம்!

‘இரண்டு வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக சறுக்கிய காரணத்தினால் விபத்து ஏற்பட்ட இடத்தில் சந்தேகத்திற்கிடமாக ஏதாவது இருந்திருக்கும்’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் செய்தியாளர் சந்திப்பொன்றில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் சுமந்திரன் பயணித்த வாகனம் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் விபத்துக்கு உள்ளாகியிருந்தது.

இதன்போது, அன்றையதினம் இடம்பெற்ற விபத்து ஈரமாக இருந்த வீதியில் உள்ள வளைவு திருப்பம் ஒன்றில் சென்று கொண்டிருந்த நிலையில், வாகனம் சறுக்கி வீதியின் இரு பக்கமும் உள்ள பாதுகாப்பு கவசங்களை மாறி, மாறி மோதி, சுழல தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு வாகனம் அங்கு சறுக்குவதற்கு வீதியில் எண்ணெய் அல்லது வேறு ஏதாவது இருந்ததா என்று தெரியவில்லை எனவும் தமது வாகனத்திற்கு பின்னால் வந்த மற்றுமொரு வாகனமும் அதே போன்று மோதி மிக மோசமாக சேதமடைந்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இந்த விபத்தில் தெய்வாதீனமாக தமது வாகனத்தில் பயணம் செய்தவர்களுக்கு எவ்வித ஆபத்தும் இடம்பெறவில்லை.

ஆனால் விபத்திற்குள்ளாகிய இரு வாகனங்களும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகி இருக்கின்றன.

ஒரு இடத்தில் சிறிய இடைவெளியில் இரு வாகனங்கள் சறுக்கிய காரணத்தினால், அந்த இடத்தில் ஏதாவது இருந்திருக்குமா என்ற சந்தேகம் தோன்றுகின்றது”

எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.