January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ரிஷாட் பதியுதீனின் கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையல்ல’: அமைச்சர் ஜீ.எல். பீரிஸ்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தக் கைதுக்கும் அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல என்றும் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

ரிஷாட் பதியுதீனும் அவரது சகோதரரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

“எதிர்க்கட்சியினரும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் ரிஷாட் கைது தொடர்பில் அரசு மீது வீண்பழி சுமத்துகின்றனர்.

சட்டம் தன் கடமையைச் செய்யும்;. இதில் அரசின் தலையீடு இருக்க மாட்டாது என்பதை அவர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும்.”

என்றும் அவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கைகள் சட்ட நடவடிக்கைகளின் ஊடாக நிறைவேறியே தீரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.