November 10, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கையில் முஸ்லிம், தமிழர்களை ஒடுக்கும் பாசிச ஆட்சி நடைபெறுகிறது’: தமிழகத்தின் மனிதநேய மக்கள் கட்சி

இலங்கையை ஆளும் ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களை ஒடுக்கும் ஒரு பாசிச அரசாக செயல்பட்டு வருவதாக தமிழகத்தின் மனிதநேய மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புபடுத்தி அரசு தடை செய்துள்ள முஸ்லிம் அமைப்புகளில் பெரும்பாலானவை பயங்கரவாதத்திற்கு எதிராக தொடர்ந்தும் மக்களிடையே பரப்புரை செய்தவை என்று பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட, இனவாதமாகச் செயற்படும் சிங்கள அமைப்புகள் ஏன் தடை செய்யப்படவில்லை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பேராயர் மெல்கம் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளதைப் போன்று அரசியல் ஆதாயத்திற்காக கைக்கூலிகளை பயன்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகள் தப்பவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களின் நிலங்களையும் ராஜபக்‌ஷ அரசு கைப்பற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலில் இந்திய வம்சாவளித் தமிழர்கள், அடுத்து ஈழத் தமிழர்கள், இப்போது முஸ்லிம்கள் என அடுத்தடுத்து குறி வைத்து சிங்கள இனவாத அதிகார வர்க்கம் தாக்கி வருவதாகவும் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் சிறுபான்மை விரோத போக்கைக் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி திமுக கூட்டணியில் போட்டியிட்ட கட்சியாகும்.