நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தாக்கம் அதிகரித்தாலும் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளின் படி விமான நிலைய நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து இடம்பெறும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தற்போது நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையை கட்டுப்படுத்த இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி, இலங்கை வரும் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதனால் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களை சமூகத்துடன் ஒன்றிணைவதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்வதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்.
இதில் வெளிநாடுகளில் பணிபுரிகின்ற தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் நாட்டுக்கு வருவதால், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளது.
அதேபோல, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் பாதுகாப்பான முறையில் நாட்டுக்கு அழைத்து வந்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வந்த ஒரு சுற்றுலாப் பயணி கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டால், குறித்த நபர் சமூகமயமாக்குவது தடுக்கப்படும்.
இருப்பினும், உலகெங்கிலும் கொவிட்-19 வைரஸின் மூன்றாவது அலை தலைதூக்கியுள்ளதால் தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது. ஆனால், சுகாதாரப் பிரிவின் ஆலோசனையை நாங்கள் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம் என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, சுற்றுலாப் பயணிகளின் வருகையை கட்டுப்படுத்துவது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று கூறிய அமைச்சர், நாட்டுக்குப் பாதகத்தை ஏற்படுத்தாத எந்தவொரு விடயத்தையும் தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும், அதைத் தான் நாங்கள் சரியாக செய்து வருகின்றோம் என்றும் கூறினார்.
இதற்கிடையில், வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு நாட்டிற்கு வருவதற்கான அனுமதியை மாற்றியமைப்பதற்கு இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.