July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சபாநாயகரின் அனுமதியின்றி ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டது ஜனநாயக விரோதமானது’: ரவூப் ஹக்கீம்

நாட்டில் சட்டத்தின் ஆட்சி அதல பாதாளத்திற்குச் சென்றிருப்பதையே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கைது எடுத்துக் காட்டுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

சபாநாயகரின் அனுமதியோ, நீதிமன்ற உத்தரவோ பெறப்படாமல் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி கைது செய்யப்பட்டது, ஜனநாயக விரோத நடவடிக்கையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முறைகேடான, அரசியல் உள்நோக்கம் கொண்ட கைதுகள் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை மேலும் கேள்விக்குறியாக்கி உள்ளதாகவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களில் இருந்து மக்களைத் திசை திருப்பி, ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளை மூடி மறைப்பதற்காகவே இவ்வாறான கைதுகள் இடம்பெறுவதாகவும் ஹக்கீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் அரசியல் தலைவர்களை ஈஸ்டர் தாக்குதலோடு தொடர்புபடுத்துவதன் ஊடாக பெரும்பான்மை சமூகத்தினரிடையே முஸ்லிம் சமூகத்தின் மீது வெறுப்புணர்வு ஏற்படக் காரணமாகியுள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.

“முன்னாள் ஆளுநர் அசாத் சாலி மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் கைதுகளும் இவ்வாறனவையே.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பொறுத்தவரை சிறுவர்களை வற்புறுத்திப் பெறப்பட்ட சோடிக்கப்பட்ட வாக்குமூலத்தை வைத்து அவர் ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ரிஷாட் பதியுதீன் முன்னைய சந்தர்ப்பங்களிலும், புலனாய்வுத் துறையினருக்கும், குற்றத் தடுப்பு பிரிவினருக்கும் விசாரணைகளின் போது ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.

ரியாஜ் பதியுதீன் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பதும் கவலைக்குரியது.

இவ்வாறான பழிவாங்கும் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கதாகும்”

என்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.