இலங்கையில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், நாட்டை முழுமையாக முடக்குவதற்கு எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் கொரோனா தடுப்பு செயலணி நடத்திய விசேட ஊடக சந்திப்பில், இராணுவத் தளபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
வார இறுதி நாட்களில் எவ்வித பயணக் கட்டுப்பாடுகளோ, ஊரடங்கோ அமுல்படுத்தப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு மாதங்களின் பின்னர் நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அபாயம் அதிகரித்துள்ளதாகவும், பொதுமக்கள் பொறுப்புடன், சுகாதார ஒழுங்குகளைப் பேணி நடந்துகொள்ள வேண்டும் என்றும் ஷவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.
கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகும் நோயாளர்கள் அதிகமாக கண்டறியப்படும் பிரதேசங்களை தனிமைப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு செயலணி அறிவித்துள்ளது.
புதிய வகை கொரோனா வைரஸ், ஒருவர் மூலம் இன்னொருவருக்கு பரவும் அபாயம் அதிகமாகக் காணப்படுவதாகவும், புதிய வைரஸ் வீரியத் தன்மை கூடியதாகும் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மாலவிகே இதன்போது, சுட்டிக்காட்டியுள்ளார்.