January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

88 வயதான மன்மோகன் சிங்கிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்புச் சிகிச்சை மையத்தில் சிறப்பு மருத்துவக் குழு அவருக்கு சிகிச்சையளித்து வருகிறது.

அவர் நல்ல உடல் நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், மன்மோகன் சிங் விரைவில் நலம் பெற வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

குறித்த பதிவில், மன்மோகன்சிங் “விரைவாகக் குணமடைய” பிரார்த்திப்பதாகவும், அவருக்கு நல்ல ஆரோக்கியமும், முழுமையான மற்றும் விரைவான நலமும் கிடைக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவல் 2-வது அலை தீவிரமடைந்துள்ளது.

நாளாந்தம் 2 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதுடன், ஆயிரக்கணக்கில் உயிரிழந்தும் வருகின்றனர்.

இதையடுத்து இந்தியாவை பிரிட்டன் தனது சிவப்பு பட்டியலில் சேர்ப்பதாக அறிவித்த அதேவேளை,இந்தியாவுக்கான அனைத்து பயணங்களையும் தவிர்த்துக்கொள்ளுமாறு அமெரிக்கா, அதன் குடிமக்களுக்கு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.