November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அமைதிக்காக போராடியவர்களை கூட அஞ்சலிக்க முடியாத நிலையில் தமிழர்கள்’; சிறீதரன் எம்.பி

அமைதிக்காகவும் மனிதாபிமானத்திற்காகவும் போராடியவர்களையே அஞ்சலிக்க முடியாதவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 33 ஆவது ஆண்டு நினைவு நாளான இன்று(திங்கட்கிழமை)  அவருக்கு கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அஞ்சலி செலுத்திய பின்னர் ஆற்றிய உரையின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த காலத்தில் இந்தியப் படைக்கு எதிராக குரல் கொடுக்க, அறப் போராட்டங்களை தமிழர்கள் நடத்தினார்கள்.

அந்த அறப் போராட்டத்தினை ஆரம்பித்து வைத்தவர் திலீபன்.அவருக்கு பின்னர் அன்னை பூபதி உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும் என்கிற இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணா நோன்புப் போராட்டத்தை தொடங்கினார்.

அன்னை பூபதியின் வரலாற்று தடங்கள் வித்தியாசமானது.உறுதியான பெண்மணியாக உலகத்தில் வாழ்கிற பெண்களுக்கெல்லாம் முன்மாதிரியாக அறவழியில் தன் மக்களுக்காக மண்ணுக்காக தன் உயிரைத் தியாகம் செய்த தியாகியாக அன்னை பூபதி மிளிர்கிறார்.

அவ்வாறான தாயின் நினைவு நாளைக்கூட நாம் கொண்டாட முடியாதவர்களாக நசுக்கப்பட்டு இருக்கிறோம்.

அவர் ஒரு பயங்கரவாதி அல்ல, அவர் ஆயுதம் ஏந்தவில்லை, துப்பாக்கி ஏந்தி யாரையும் சுடவில்லை, யாரையும் சுடவேண்டும் என்று கூட கேட்கவில்லை, அவர் கேட்டதெல்லாமே அமைதியையும் மனிதாபிமானத்தினையும் மட்டுமே கோரிக்கையாக முன்வைத்திருந்தார்.

அதற்காகவே 30 நாட்கள் ஆகாரமின்றி தன்னுயிரை ஈகம் செய்தவரைக்கூட நினைவுகூர முடியாதவர்களாக நாம் இருக்கிறோம். இன்றைய கால கட்டத்தில் நெருக்கடிகளுக்கும் வன்முறைகளுக்கும் தமிழர்களாக நாம் முகம் கொடுக்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.