‘அஸ்ட்ரா செனிகா’ தடுப்பூசி தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவை தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கையில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி வழங்குவதில் ஏற்பட்டுள்ள கால தாமதம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது, குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ரா செனிகா தடுப்பூசி தொடர்பில் சர்வதேச நாடுகளில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகள் பரவி வருவதாகவும், அதுதொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார முன்களப் பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் இம்மாதம் 12 ஆம் திகதியளவில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், இதுவரையில் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விசனம் வெளியிட்டுள்ளது.
இரண்டாவது டோஸ் தடுப்பூசி வழங்குவதற்குப் போதியளவு தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என்றும் அதுதொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு அரசாங்கத்தின் தீர்வு குறித்தும் தெளிவு தேவை என்றும் குறித்த சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.