
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனிடம் மூன்றாவது தடவையாக இன்று பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, வவுனியா ஆகிய 3 பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது சிவசக்தி ஆனந்தனின் அலுவலகத்திற்கு சென்ற பொலிஸார் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் பங்கெடுத்தமை தொடர்பிலும் நீதிமன்ற உத்தரவுகளை மீறியமை தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை “தனது பெயர் குறிப்பிட்டு எவ்விதமான நீதிமன்ற உத்தரவுகள் வழங்கப்படவில்லை என்றும், தாம் நீதிமன்றத்தின் கட்டளைகளை மீறி நடக்கவில்லை” என்றும் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை கோரி நிற்கையில் அரசியல் கட்சியின் பிரதிநிதியாக மக்களுடன் மக்களாக போராட்டத்தில் பங்கேற்றதாகவும் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒன்றுக்கு மூன்று தடவைகள் இவ்வாறு விசாரணை என்ற பெயரில் ஒரு சில அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை இலக்குவைத்து பொலிஸார் செயற்படுவது தொடர்பிலும் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.