July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாகிஸ்தான் புறப்பட முன்னதாக முஸ்லிம் தலைவர்களை சந்தித்தார் இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் மகிழ்ச்சிகரமான- பலனளிக்கக்கூடிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இரு-நாள் விஜயமாக இலங்கை சென்றிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் ஜனாதிபதியுமான இம்ரான் கான் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தரப்பினரையும் அவர் இன்று சந்தித்து பேச்சு நடத்தினார்.

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை, அவர்களின் மத நம்பிக்கைக்கு மாறாக எரிக்கும் இலங்கையின் கொள்கைக்கு எதிராக பாகிஸ்தான் பிரதமர் குரல்கொடுக்க வேண்டுமென முஸ்லிம் தலைவர்கள் நேற்று செவ்வாய்க் கிழமை போராட்டம் நடத்தியிருந்தனர்.

இம்ரான் கானை சந்திப்பதற்கு முஸ்லிம் தலைவர்களுக்கு தடையேற்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டிருந்ததாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியிருந்தார்.

இந்நிலையில், கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முஸ்லிம் தலைவர்களை இம்ரான் கான் சந்திப்பதற்கு இன்று ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிலையில், இம்ரான் கான் இன்று மாலை பாகிஸ்தானுக்கு புறப்பட முன்னதாக முஸ்லிம் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரோடு ஏனைய தலைவர்களும் கலந்துகொண்ட இந்த சந்திப்பில் சக முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

“எல்லா இலங்கையர்கள் மத்தியிலும் ஒற்றுமையை ஏற்படுத்தவும் நாடுகளிடையே நல்லெண்ணத்தை வளர்க்கும் விதத்தில் பிரஜைகளின் கவலைகளை போக்கவும் இலங்கையின் தலைவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்” என்று இம்ரான் கான் நம்பிக்கை வெளியிட்டதாக ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.