இலங்கைக்கான இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடு திரும்புவதற்கு முன்னர் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தில், அவரைச் சந்திக்க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த வேண்டுகோள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டே, வந்தது.
இந்நிலையில், இம்ரான் கானை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் இறுதி நேரத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்ரான் கானைச் சந்திக்கவுள்ளனர்.
Visiting Pakistan PM @ImranKhanPTI will meet with SL Muslim Parliamentarians today. @PakinSriLanka confirmation received now. Look forward to fruitful discussions.
— Rauff Hakeem (@Rauff_Hakeem) February 24, 2021
கொரோனா பரவல் அபாயம் மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, பாகிஸ்தான் பிரதமரைச் சந்திக்க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை.
கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் கட்டாய ஜனாஸா எரிப்பு உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் முஸ்லிம் உறுப்பினர்கள் இம்ரான் கானுடன் கலந்துரையாடத் தயாராக இருந்தனர்.
இம்ரான் கானின் விஜயத்தை மையமாக வைத்து அவர்கள் நேற்று கொழும்பில் ஜனாஸா எரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபட்டனர்.
இவ்வாறான நிலையில், பாகிஸ்தான் பிரதமரைச் சந்திக்க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.