பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்தின் போது, சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்நிலையில், இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே உள்ள இரு தரப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்று புதுப்பிக்கப்படவுள்ளதாகவும் புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகள் சிலவற்றில் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளில் இலங்கை ஈடுபட்டுள்ள நேரத்திலேயே, இம்ரான் கானின் விஜயம் அமைந்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமரைச் சந்தித்து, இலங்கையின் சிறுபான்மையிர் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்கான முயற்சியில் எதிர்க்கட்சிகள் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.