November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கோட்டாபயவின் இராணுவ ஆட்சியே தமிழர்கள் பேரணி நடத்துவதற்கு முக்கிய காரணம்’

இலங்கையில் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இராணுவ ஆட்சியே நடைபெறுகின்றது. இந்த ஆட்சியால் சீற்றமடைந்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இன்று ஐ.நா.விடம் நீதி வேண்டி ஜனநாயக வழியில் போராட்டங்களையும் பேரணிகளையும் முன்னெடுக்கின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

தமிழ்பேசும் மக்கள் மீதான அரசின் அடக்குமுறைகளைக் கண்டித்தும், சர்வதேசத்திடம் நீதி கோரியும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் சமூகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பேரணி தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் இடம்பெற்ற பேரணியை பல வழிகளில் தடுத்து நிறுத்த அரசு முற்பட்டது. எனினும்,வடக்கு,கிழக்கில் பெரும் எண்ணிக்கையில் தமிழ் மக்கள் திரண்டு பேரணியை நடத்தியுள்ளனர்.

பேரணியில் கலந்துகொண்டவர்கள், அரசுக்கும் இராணுவத்துக்கும் எதிராகவே கோஷங்களை எழுப்பினார்கள். சிங்கள மக்களுக்கு எதிராக அவர்கள் எந்தக் கோஷங்களையும் எழுப்பவில்லை.

நாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இராணுவ ஆட்சியே தற்போது நடைபெறுகின்றது. அதனால் சீற்றமடைந்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இன்று ஐ.நா.விடம் நீதி வேண்டி ஜனநாயக வழியில் போராட வேண்டிய நிலைக்கு வந்துள்ளனர்.

கடந்த நல்லாட்சிக் காலத்தில் எமது அரசுக்கு எதிராக தமிழ் மக்கள் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. ஆனால், இந்த ஆட்சி தமிழ் மக்களை நீதி கேட்டுப் போராடத் தள்ளியுள்ளது.

இந்த நிலையில்,பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் பங்கேற்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று அரச தரப்பினர் வெளியிட்டுள்ள கருத்துக்கு எமது கண்டனங்களைத் தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழ் மக்களைப் போராடத் தள்ளிய அரச தரப்புக்கு எதிராகவே முதலில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதிர்வரும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டால் அதற்குக் கோட்டாபய அரசே முழுப்பொறுப்பு என்று அவர் மேலும் தெரிவித்தார்.