November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு சுமந்திரன் துரோகம் இழைத்துவிட்டார்”: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேராட்டத்தின் உண்மையான நோக்கங்களை மூடி மறைத்து, சுமந்திரன் எம்.பி பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளதாகவும், இதனூடாக அவர் பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு மாபெரும் துரோகத்தை இழைத்துவிட்டார் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியே கஜேந்திரகுமார் இவ்வாறு கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய சுமந்திரன் குறித்த போராட்டத்தின் அடிப்படையாக இருந்த பிரதான கோரிக்கைகளை கூறாது, ஒட்டுமொத்த போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் வகையிலும், பலவீனப்படுத்தும் வகையிலும் தெரிவித்திருந்தார் என்று கஜேந்திரக்குமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு தமிழ் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களுடைய தாயகம் என்ற கோட்பாட்டையோ, தமிழர்களது தனித்துவமான இறைமைகொண்ட தேசம் என்ற கோட்பாட்டையோ?, தமிழர்களுக்கு தமிழ்த் தேசத்துக்குரிய சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படல் வேண்டும் என்ற கோட்பாட்டையோ, தமிழின அழிப்புக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை ஊடாகவோ அல்லது வேறு பொருத்தமான சர்வதேச குற்றவியல் நீதி விசாரணையூடாகவோ நீதி கிடைக்க சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையோ சுமந்திரன் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருக்கவில்லை என்று கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் சுமந்திரனின் கருத்தை சாதாரண தவறாக கருதமுடியாது எனவும், இது போராட்டத்தில் கலந்து கொண்ட, ஆதரித்த, போராட்டத்தின் மீது நம்பிக்கைவைத்த மக்களுக்கு செய்த மாபெரும் துரோகமாகவே பார்க்கின்றோம் என்றும், அவரின் கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த விடயத்தில் வடக்கு கிழக்கு தமிழ் சிவில் சமூக சம்மேளனம் ஒரு விசாரணை நடத்தி நாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய பதிலை தெளிவுபடுத்தியே ஆகவேண்டும் என்றும் கஜேந்திரகுமார் வலியுறுத்தியுள்ளார்.