July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பை நானே நீக்கினேன்”

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பை தானே நீக்கியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான பேரணியின் ஆரம்பத்தில் இருந்து நிறைவுபெறும் வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் த.கலையரசன் ஆகியோர் முன்னின்று செயற்பட்டனர்.

இந்நிலையில் சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப் படை 7 ஆம் திகதி இரவு திடீரென மீளப்பெறப்பட்டிருந்தது.

இந்தநிலையில், நேற்று இரவு சிங்களத் தொலைக்காட்சி நிகழ்ச்சியியொன்றில் கலந்துகொண்டிருந்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பை தானே நீக்கினேன் என்று கூறியுள்ளார்.

“தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களால் சுமந்திரனுக்கு கொலை அச்சுறுத்தல் இருக்கின்றது என்றபடியால் அவருக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. உண்மையில் சுமந்திரனுக்கு அவ்வாறான அச்சுறுத்தல் இருக்குமானால் அவரால் இவ்வாறான பேரணியில் கலந்துகொண்டிருக்க முடியாது. எனவே, அவருக்கு அந்தப் பாதுகாப்பு எதற்கு?” என்று சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டிலிருந்து எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில் அவருக்கான விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

கொலை முயற்சி சம்பவங்கள் தொடர்பாக 30 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்துடன், அது தொடர்பில் தற்போதும் 6 இற்கும் அதிகமான வழக்குகள் நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.