பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் பேரணி மன்னாரிலிருந்து யாழ். பிரதான வீதியூடாக வெள்ளாங்குளம் நோக்கி பேரணி பயணித்துள்ளது.
வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கிப் பயணித்த இந்தப் பேரணி, மன்னார் மடுச் சந்தியை அடைந்து அதன்பின்னர் அங்கிருந்து முருங்கன் ஊடாக மன்னார் நோக்கிச் சென்றது.
இதன் போது பிரதான வீதிகளில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடிகளில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு தடைகளையும் தாண்டி குறித்த பேரணி மன்னார் பிரதான பாலம் ஊடாக மன்னார் நகர வந்தடைந்தது.
மன்னார் பிரதான பாலத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டதோடு, மன்னார் நீதிமன்றத்தின் கட்டளையையும் பொலிஸார் ஒலி பெருக்கி மூலம் அறியப்படுத்தினர்.
இதனையடுத்து பேரணியாக வந்த மோட்டார் சைக்கிள்களின் மற்றும் வாகனங்களின் இலக்கங்களையும் பொலிஸார் பதிவு செய்த பின்னர் மன்னார் நகர பகுதிக்குள் செல்ல அனுமதித்தனர்.
இதேவேளை இந்தப்பேரணியில் சர்வ மத தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இளைஞர்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அத்தோடு மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவுகளும் பேரணியில் இணைந்து கொண்டனர்.