ஒட்டுமொத்த தமிழ் இனமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கை குழு ஒன்றை உருவாக்குவதற்கு இன்றைய கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளையும் ஒன்றிணைத்து இன்று இடம்பெற்ற அவசர கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசு சாராத தமிழ் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலர் உள்ளடங்கிய ஒரு ஆலோசனை குழு கூட்டத்தை இன்று நடத்தியதாகவும் கூறியுள்ள அவர், 10 தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஒன்பது கட்சிகள் கலந்துகொண்டது எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்து கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டார்.
ஒட்டுமொத்த தமிழ் மக்களை பாதிக்கக்கூடிய வகையில், அசுர வேகத்தில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்கொள்ளுவதற்கான தந்திரோபாய வேலைத்திட்டங்களை வகுப்பதற்காகவே இந்த கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டது என கூறியுள்ளார்.
பங்குபற்றிய அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளிடம் தலா இரண்டு பிரதிநிதிகளை தந்து ஒரு நடவடிக்கை குழுவை அமைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதை ஆராயும் படி கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை குழுவானது பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களை பெற்றுக்கொண்டு ஒரு சரியான இலக்கை நோக்கி பயணிக்கும் எனவும் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.