January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கந்தகாடு கொரோனா சிகிச்சை நிலையத்தில் போதைப்பொருள் நிரப்பிய டென்னிஸ் பந்துகள் மீட்பு

போதைப் பொருட்கள் நிரப்பப்பட்ட இரண்டு டென்னிஸ் பந்துகள் பொலனறுவை கந்தக்காடு கொரோனா சிகிச்சை நிலைய வளாகத்திற்குள் வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

வெளியில் இருந்த சிகிச்சை நிலையத்திற்குள் பந்துகள் வீசப்பட்டதை அவதானித்த பாதுகாப்பு தரப்பினர், அவற்றை சோதனையிட்ட போது அவற்றுள் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

அங்கு சிகிச்சைப் பெற்று வரும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் பாவனைக்காக இவ்வாறு போதைப்பொருள் நிரப்பப்பட்ட டென்னிஸ் பந்துகள் வீசப்பட்டிருக்கலாம் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வெலிக்கட மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளில் இதேபோன்று பந்துகள் மூலம் போதைப் பொருட்கள் விநியோகிக்கும் சம்பவங்கள் பதிவாகியிருந்தாலும், கொரோனா சிகிச்சை மையத்திலிருந்து இதுபோன்ற சம்பவம் இடம்பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர்  அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.